Aug 5, 2013

மணவிலக்கு - Your Attention Please...!

நீதிமன்றத்துக்கு விவாகரத்துக் கேட்டு செல்வது தவறு என்கிற சிந்தனை, போன தலைமுறையில் இருந்தது. விவாகரத்துக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்கிற சிந்தனையுடன்தான் வாழ தலைப்பட்டிருக்கிறது இந்தத் தலைமுறை என்று சுடுகின்ற உண்மையை நம்மில் எத்தனை பேர் ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறோம்?

கவிதை மொழி பேசி, ஏங்கி ஏங்கித் தவித்துக் காதலித்து, பெற்றவர்களையும் உறவுகளையும் எதிர்த்து, சவால்களை தூசுகளாய்க் கடந்து... காதல் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் பெருகி வருகிறார்கள்.

அதேசமயம், திருமண வாழ்க்கையை பூரணமாக வாழாமல், கைப்பிடித்த வேகத்திலேயே அந்த உறவிலிருந்து சட்டப்பூர்வமாக விலகுவதும் அதிகரித்து வருகிறது!

இந்தக் காலத்தில் கணவன் - மனைவி இருவரும் சம்பாதிக்கும் குடும்பங்களில் திருமண முறிவு என்பது வெகு இயல்பான விஷயமாகிப் போய்விட்டது என்கிற நிதர்சனமான உண்மை, நடந்து கொண்டிருக்கும் விபரீதத்தை உணர்த்திக்கொண்டு தான் இருக்கிறது. ஏன் இந்த ம(ன)ண முறிவுகள்?

காதல் தம்பதிகளிடம் ஏன் விவாகரத்து பெருகிறது என்ற கேள்விக்கு,
இதோ  மனநல மருத்துவர் ஷாலினியின் பதில்...

"இன்றைய பெண்ணின் தேவை மாறி வருகிறது என்பதை ஓர் ஆண் புரிந்து கொள்ளாததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். அவன் பார்த்து வளர்ந்த அவன் அம்மாவைப் போல்... வெறும் உணவும், உடையும், நகையும் பெண்ணின் தேவை அல்ல இன்று. அவள் எதிர்பார்ப்பது சமத்துவம், சமமான மரியாதை. காரணம், பெண்ணும் இன்று ஆணுக்கு நிகராக சம்பாதிக்கிறாள், படித்து இருக்கிறாள், உலகம் தெரிந்து இருக்கிறது. அதனால் பெண் அட்வான்ஸ்டாக வளர்ந்துவிட்டாள். ஆனால்... ஒரு ஆண், ஒரு பெண்ணை நடத்தும் சிந்தனையில் இன்னும் பத்து வருடங்கள் பின்தங்கிதான் இருக்கிறான். வெறும் மல்லிகைப் பூவுக்கும் சினிமாவுக்கும் சமாதானமாகிப் போகிற பெண்தான் அவனுடைய சிந்தனையில் இருக்கிறாள். ஆனால், பெண்ணின் மனதில் இருப்பதோ... இந்தத் துணை,  நம்மை சரிசமமாக நடத்துவான் என்கிற நம்பிக்கைதான். இந்த எதிர்பார்ப்புகள் எதிரெதிர் திசையில் செல்லும்போது, விவாகரத்துதான் வழி என்று தீர்மானிக்கிறார்கள்."

விவாகரத்து செய்வதால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, சம்பந்தப்பட்ட அப்பாவும், அம்மாவும் உணர வேண்டும்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 4 குடும்ப நல நீதிமன்றங்கள் இருக்கின்றன. மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு குடும்பநல நீதிமன்றம் இருக்கிறது. இவற்றுடன் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் சிவில் கோர்ட்டுகளிலும் தினசரி விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன.
1980-களில் ஓராண்டுக்கே 20 - 30 விவாகரத்து வழக்குகள் வரைதான் ஒரு நீதிமன்றத்துக்கு வரும். இன்று தினமும் ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் குறைந்தது 10 வழக்குகள் என்கிற அளவுக்கு நிலைமை கைமீறிப் போயிருக்கிறது.

 சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2008-ல் 25 வயதுக்குள் விவாகரத்து பெற்ற ஆண்கள் 2%, 2011-ல் 4%. 2008-ல் பெண்கள் 3%, 2011-ல் 6%.

 மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை போன்ற பெருநகரங்களில் விவாகரத்து வழக்குகள் அநியாயத்துக்கும் பெருகிக் கொண்டிருக்கின்றன. 1990-களில் வருடத்துக்கு 1,000 வழக்குகள் பதிவான நிலையில், அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2000 ஆண்டுகளில் வருடத்துக்கு 9,000 வழக்குகள் என உயர்ந்துள்ளது.
இதில் 25-35 வயதுக்கு உட்பட்டவர்கள் 75 சதவிகிதத்தினர். திருமணம் செய்துகொண்ட 3 ஆண்டுகளுக்குள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தவர்கள் 85 சதவிகிதத்தினர்.



0 comments:

Post a Comment