Aug 9, 2013

மறைமுகப்போருக்கு தயாராகிவிட்டது இந்தியா!

இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் விமானப்படை தளம் அமைக்கப்பட்டு அதில் அதி நவீன சுகோய் 30 விமானங்கள் நிறுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு உருவாகியுள்ளது. அதனால், இந்திய விமானப் படையின், புதிய விமான தளம், தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா, வரும், 27ம் திகதி நடைபெறுகிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமான தளங்கள், தமிழகத்தில், கோவை அருகே சூலூரிலும், சென்னையை அடுத்த தாம்பரத்திலும் ஏற்கனவே உள்ளன. தற்போது, மூன்றாவதாக, தஞ்சாவூரில், புதிய விமானத் தளம், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த விமான தளம் முழு அளவில் தயாராக, 5 ஆண்டுகளாகும். 2012ம் ஆண்டில், ரஷ்யாவிடமிருந்து, சூப்பர்சானிக் ஜெட் விமானங்கள் வாங்கப்பட்டன. “சுகோய்’ என, அழைக்கப்படும், இந்த ஜெட் விமானங்கள், மணிக்கு, 3,200 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடிய ஆற்றல் படைத்தவை. தஞ்சாவூர் விமானப்படை தளம், முழு அளவில் தயாரானவுடன், 16 முதல், 18 சூப்பர் சானிக், சுகோய் விமானங்கள், இங்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளன.

இந்திய பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதே, தஞ்சாவூரில் புதிதாக விமான தளம் அமைப்பதற்கான, முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, டில்லியில், நேற்று விமானப் படையின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டின் வடக்கு பகுதியில், எப்போதும் ராணுவத்தின் கண்காணிப்பும், பலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தென்பகுதி, கடல் சூழ்ந்த பகுதி. மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, இங்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. குறிப்பாக, இலங்கையில், 2009ம் ஆண்டில், உள்நாட்டு போர் நிறைவு பெற்றது. இந்த போருக்கு முன் வரை இருந்த நிலைமை வேறு. போருக்கு பின், சீனாவின் ஆதிக்கம், அதிகம் உள்ளது. இலங்கையின், ஹம்பன்தொடாவில், சீனா துறைமுகத்தை கட்டி முடித்துள்ளது.அதேபோல், பாகிஸ்தானிலும், காலூன்ற ஆரம்பித்து உள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய பெருங்கடலில், சீன ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, சீன கடற்படையின் நடமாட்டங்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த பின்னணியில் தான், தஞ்சாவூரில் புதிய விமானப்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த விமானப்படை தளம், 2018ம் ஆண்டில், முழுமையாக தயாராகி விடும். இதன் கட்டமைப்பு, சுகோய் விமானங்களை நிறுத்துவதற்காகவே, வடிவமைக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், மற்ற ரக விமானங்கள் எல்லாம், வந்து செல்லும். முழுமையாக தயாரான பின், கடைசியாக, இங்கு சுகோய் விமானங்கள் நிறுத்தப்படும்.

ஏற்கனவே, 6,000 அடியாக இருந்த ஓடுதளம், தற்போது, 12 ஆயிரம் அடியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விமானதள கட்டுப்பாட்டு அறையும் தயாராகியுள்ளது. விமானப்படை தளத்தைச் சுற்றிலும், வேலி கட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. தீயணைப்பு சேவையின் எண்ணிக்கையும், அதிகரிக்கப்பட்டுள்ளது.இரவு நேரங்களில், விமானங்கள் தரையிறங்க மற்றும் கிளம்பிச் செல்ல தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ரஷ்யாவிடம் இருந்து, மொத்தம், 272 சூப்பர்சானிக், சுகோய் விமானங்களை வாங்குவதற்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு, 56 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.

இவற்றில், 170 விமானங்கள் ஏற்கனவே, “டெலிவரி’யாகி விட்டன. இந்த விமானங்கள் தற்போது, மகாராஷ்டிரா மாநிலம் புனே, உ.பி.,யின் பரேலி, அசாமின் தேஜ்பூர், பஞ்சாபின் ஹல்வா, ராஜஸ்தானின் ஜோத்பூரிலும் உள்ள விமானப்படை தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

0 comments:

Post a Comment