Aug 14, 2013

பழிவாங்கும் ஆவி!

தர்மபுரி மாவட்ட எல்லையாக இருப்பது தொப்பூர் கணவாய். சுமார் 3 கி.மீ தூரத்துக்கு இருபுறமும் மலையால் சூழப்பட்ட இந்த பகுதி, அடர்ந்த மரங்கள், செடி கொடிகள் நிறைந்து பார்ப்பதற்கே திகிலூட்டும்படி இருக்கிறது. இந்த கணவாய் பகுதிக்குள் நுழையும் ஆண்கள் பலர் அகோராமாய் இறப்பதாகவும், அதற்கு ஆண்களை பழிவாங்கும் பெண்ணின் ஆவிதான் காரணம் என அச்சப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

பல ஆண்கள் அந்த கணவாய் பகுதியில் பலியாகி இருப்பதும், ஆவியின் கையில் சிக்கி நூலிழையில் தப்பியதாக கூறும் சிலரின் வாக்குமூலங்களும் பயத்திற்கு அச்சாரமாக உள்ளது.

சில வருஷங்களுக்கு முன்பு வேடியப்பன், பரமன் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேர் வெளியூர் போய்விட்டு தர்மபுரிக்கு ஒரு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர். அமாவாசை என்பதால் கும்மிருட்டாக இருந்தது. தொப்பூர் கணவாயை கடந்துதான் செல்ல வேண்டும். அப்பகுதியில் மோகினி நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படுவதால் வேடியப்பனுக்கு பயம் உச்சத்தில் இருந்தது.

கணவாய் வளைவு நெருங்க நெருங்க அவருக்கு உடல் வெடவெடத்தது. முன்னால் உட்கார்ந்திருந்த பரமனும், பின்னால் உட்கார்ந்திருந்த செல்வமும் எதையும் கண்டு கொள்ளாமல் ஜாலியாக பேசியபடி வந்தனர். கணவாய் பகுதிக்குள் நுழைந்ததும் பாதை மேடாக இருந்ததால் கீழே இறங்கி சைக்கிளை தள்ளியபடி வந்தனர். அப்போது திடீரென மூன்று பேருக்கும் மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது. எப்படியோ சுதாரித்துக் கொண்டு தொடர்ந்து நடந்தனர்.

சிறிது நேரத்தில் கமகமவென மல்லிகை வாசம் வீசியது. அப்போது மரத்தடிக்கு அருகில் பெண் உருவம் நிற்பது போன்று தெரிந்தது. அதை பார்த்ததும் பரமனும், செல்வமும் பரவசமடைந்து வேடியப்பனிடம் சைக்கிளை நிறுத்த சொன்னார்கள். ஆனால் பேய் பயத்தில் இருந்த அவர் நிறுத்தவில்லை. ஆனாலும் பரமனும், செல்வமும் சைக்கிளை இழுத்து நிறுத்தினார்கள். ‘நாங்க பாத்துட்டு வரோம்’னு சொல்லிவிட்டு போனார்கள். பெண் உருவம் காட்டுக்குள் மறைய இரண்டு நண்பர்களும் காட்டுக்குள் சென்றனர். அங்கு ஆக்ரோஷ உருவம் காட்டி சிரித்த பேயை பார்த்து விட்டு, பீதியில் அலறியடித்து ஓடி வந்தவர்களின் உயிரை, கணவாய் ரோட்டில் வந்த ஒரு லாரி பறித்துக் கொண்டு போய்விட்டது. வேடியப்பன் மட்டும் தப்பி வந்துவிட்டார் என்று சம்பவத்தை விவரிக்கும் மக்களின் பேச்சில் கலக்கம் அப்பட்டமாய் தெரிகிறது.

இதுபோல ஒன்றிரண்டு அல்ல. பல சம்பவங்கள் நடந்திருக்கு என்று சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

தர்மபுரியை சேர்ந்த லாரி டிரைவர் செல்லமாதுவும், கிளீனர் தீத்தானும் கணவாய் கட்டமேடு பகுதியில் விபத்துக்குள்ளாகி அகோரமாக பலியானாங்க. இதுமாதிரி நிறைய ஆம்பிளைங்க தொப்பூர் கணவாய் கட்டமேடு, கணவாய் வளைவு பகுதியில செத்துபோயிருக்காங்க.. மாசத்துக்கு 8 அல்லது 10 தடவை விபத்து நடக்குது. அதில் பலர் பலியாகிடுறாங்க. ஆவி குறுக்கே போகும்போது நேர்பட்டுதான் அவங்க செத்து போறாங்க. தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள மூலிகை பண்ணையில சில வருஷத்துக்கு முன்னால வயசு பொண்ணு ஒருத்தி இருந்தா, கொள்ளை அழகு. அவளை ரவுடி பசங்க பலாத்காரம் செய்து கொன்னு வீசிட்டு போயிட்டானுங்க. அந்த பெண்ணோட ஆவிதான் கொலைவெறியுடன் ஆண்களை பழிவாங்குது‘ என்று ஊர் பெரியவர்கள் சொல்கின்றனர். பேய் நம்பிக்கை ஆட்டிப்படைப்பதால், தொப்பூர் கணவாயில் செல்லும் ஆண்கள் பீதியுடனே கடக்கின்றனர்.

0 comments:

Post a Comment