Showing posts with label கவனம். Show all posts
Showing posts with label கவனம். Show all posts

Jan 31, 2014

சி.எஃப்.எல். பல்பு - சில தகவல்கள்


'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்’ என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.

சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.

அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.

வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.

சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்’ செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.

சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது  ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.

Jan 3, 2014

டை அடிப்பவரா நீங்கள்?

பலர் தவிர்க்கமுடியாத ஒரு விஷயம் ஹேர் டை. ஆம் எனக்கு 17 வயதில் இருந்து தேவை பட்டது. பலருக்கு 30 வயதில் ஆரம்பித்து 45 வயதிற்குள் கண்டிப்பாக நரை என்ற விஷயம் தவிர்க்கமுடியாமல் போகிறது. இதில் என்னை பொறுத்த வரை 75% சதவிகித ஆண் பெண் ஹேர் டை உபயோகத்திற்க்கு ஆளாகின்றனர். இதில் சில பேர் தலைக்கு மட்டும், சிலர் மீசைக்கு, சிலர் தாடிக்கு, சிலர் நெஞ்சு முடிகளுக்கு என்று ஹேர் டை உபயோகம் நம் உடம்பில் ஒரு அங்கமாகிறது. சில பெண்கள் நரை அவ்வளவு இல்லாதவர்கள் மருதாணி அரைத்து போட்டுகொண்டு இருந்ததும் இப்பொழுது அதுவும் ஹேர்டை கம்பெனிகள் மருதாணி, நெல்லிக்காய், என்று எல்லாம் இயற்கை வடிவில் என நமக்கு கெமிக்கல் கலவைதான் கொடுக்கின்றனர்.

இதில் இப்ப நம்மவர்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாகி சார் எனக்கு டை பற்றி இப்ப நல்லா தெரியும் அதனால் " நான் அம்மோனியா" தான் போடுவேன் என்று பெருமையாக கூறுவார்கள். ஆனால் நிறைய பேருக்கு அம்மோனியா நான் அம்மோனியா வித்தியாசம் தெரிவதில்லை. தெரிந்தாலும் 50% சதவிகிதம் தான் நீங்கள் ரிஸ்க்கை தவிர்க்கலாம். முதலில் அம்மோனியா டைதான் முன்னைய காலத்தில் பிரபலம். இதில் உள்ள ஒரே வித்தியாசம் இந்த அம்மோனியா டை அடித்தால் கலர் போகவே போகாது. ஆனால் புது முடி வரும்போது கீழே வெள்ளைமுடி தெரியும். அதுபோக அம்மோனிய டை மிக மோசமானது. தொடர்ந்து 10 வருடங்கள் உபயோகித்தால் ஆஸ்மாவும் 15 வருடத்தில் கேன்சர் வர வாய்ப்பிருக்கிறது. அதனால் நான் அம்மோனியா உபயோகித்தால் மட்டும் நல்லது என நினைக்கவேண்டாம். நான் அம்மோனியாவில் தாக்கம் கொஞ்சம் தான் குறைவு மற்றபடி நான் அம்மோனியா டையும் இதே பிரச்சினைகள் தான். மருதாணி நீங்கள் அரைத்து போட்டால் தான் சேஃப், ஆனால் கடையில் விற்கும் ஹென்னா, நெல்லிகாய் ஹேர் டை இதெல்லாம் நமக்கு நாமே நாள் குறிக்கும் ஸ்லோ பாய்ஸன். ஆம் இந்த ஹேர் டையில் முக்கிய நச்சு பொருள் "ஃபீனலியின்டைலமின்" எனும் (Para-Phenylenediamine - PPD ) பொருள் மிக மோசமான ஒரு விஷயம். ஹென்னா எனப்படும் மருதாணி கொடுக்கும் நிறம் சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு தான். அதனால் ஹென்னா போட்டு கருப்பு நிறம் ஆனால் கண்டிப்பாக அது பிபிடி உள்ள ஹேர் டைதான். 100% இயற்கை ஹேர் டை என்று ஒரு ஹேர் டை உலகத்தில் இல்லை. இதில் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஏன் தெரியுமா - இந்தியர்கள் தான் " நேச்சுரல் பிளாக்" ஃபுல் பிளாக் வண்ணத்தை உபயோகிக்கிறோம். இதில் அதிகமாக கெமிக்கல் கலக்கபடுவதால் ரிஸ்க் அதிகம். நார்மலாக ஒரு சராசரி மனிதன் 10 - 12 முறை டை அடிக்கிறான். இது மிகவும் ஆபாத்தான விஷயம். மீசைக்கு அடிப்பது, நெஞ்சு முடிக்கு அடிப்பது மிக மிக ஆபத்தானது. சிலருக்கு மிக ஸ்லோவாக மூச்சு விட சிரமம் ஆரம்பித்து பிறகு அது ரெகுலர் பிரச்சினையாகிவிடும்.

நிறைய நாடுகளில் இந்த பிபிடியை தடுக்க ஹெல்த் மினிஸ்ட்ரி போராடினாலும் இந்த சலூன்கள் இதை பெருமளவில் மறைத்து டை போடுகின்றனர். டை போடுவதால் முடி கொட்டும் மற்றும் அதிக க்ருப்பு ஷேடுகளை தவிருங்கள். ஒரு பூத கண்ணாடியை வைத்து என்ன கெமிக்கல் உள்ளது என பாருங்கள். ஏன் என்றால் அவ்வளவு சிறிதாக தான் கெமிக்கல் டீட்டெயில் பற்றி போட்டிருப்பார்கள் அந்த கெமிக்கல் டீட்டெயிலை பற்றி கூகுள் செய்யுங்கள் வாழ்க்கையில் டை அடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவீர்கள். சரி டை போடுவது நம் வெள்ளை முடியை மறைக்கத்தான் சரி என்ன செய்வது என டை போடும் மனிதர்களை வேண்டுமானால் பார்த்து பரிதாப படலாம் ஆனால் நல்லா கருப்பாய் இருக்கும் முடியை பான் பராக், காரக்குழம்பு தலையாக்கும் இளைஞன் இளைஞிகளை நினைத்தால் தான் மிக பரிதாபம். ஏன் என்றால் அவர்கள் ஒரு தடவை பயன்படுத்தினால் வாழ்க்கை முழுவது அந்த கலரை போட வேண்டும் இல்லையெனில் அதை விட்டால் நான் கடவுள் ஆர்யா போலத்தான் ஆகவேண்டும். முழுவதும் விட மொட்டை அடித்து புது முடி வளர்ப்பதை தவிர வேறு ஒன்றும் பண்ணமுடியாது. ஆண்கள் பரவாயில்லை பெண்கள் தான் பாவம் மொட்டையும் அடிக்கமுடியாது, கலர் பண்னும் பழக்கத்தையும் விட முடியாது. நிறைய பேர் கல்யானத்திற்க்கு முன் இந்த தவறை செய்வதால் கல்யானம் ஆன பிறகு கணவர்களின் முக்கிய முகம் சுழிப்பு இந்த விஷயம் தான் அதுவும் கூட்டு குடும்பத்தில் சான்ஸே இல்லை. முடிந்த அளவு டை உபயோகத்தை கட்டுபடுத்துங்கள். இரண்டாவது வெளியே செல்லும் நாட்களில் மட்டும் பழைய டெக்னிக் "ஐடெக்ஸ்" கண்மை போட்டு போங்கள் சிலர் வெள்ளை முடியுடன் இருக்க பழகி கொள்ளுங்கள் இல்லையெனில் அட்லிஸ்ட் மாதம் ஒரு முறை என்பதை தவிர்த்து இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றினால் பிரச்சினையை தள்ளிப்போடலாம். கர்ப்பிணி பெண்கள் பத்து மாதம் தயவு செய்து போடவே வேண்டாம். இரண்டு கலவை மிக்ஸ் பன்னும் ஹேர் டை 100% பயன்படுத்துவதை தவிருங்கள் இதில் கண்டிப்பாக பிபிடி இருக்கும்

Oct 9, 2013

ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா...?

நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...

இட்லி:
பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

சோறு:
தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!

புரோட்டா:
பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!

சால்னா :

சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!

ஒரு முக்கியமான எச்சரிக்கை...

தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.

எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.

சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக் கணும்!

Aug 19, 2013

அலுவலகம் செல்பவர்களுக்கு...

காலை உணவைத் தவிர்க்காதீர்!
பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

காபி, டீ குறையுங்கள்!
காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்
வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்
டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி
அலுவலக வேலை செய்யவே நேரம் இல்லை என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!

Aug 14, 2013

எச்சரிக்கை...!

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.
யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?

பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே
கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் /புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

‘தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்’

‘தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.’

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.

ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.
இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

Aug 10, 2013

கேன் வாட்டர் - ஒரு எச்சரிக்கை

வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.

சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:

தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.

உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.

ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்

Aug 9, 2013

மறைமுகப்போருக்கு தயாராகிவிட்டது இந்தியா!

இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் விமானப்படை தளம் அமைக்கப்பட்டு அதில் அதி நவீன சுகோய் 30 விமானங்கள் நிறுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு உருவாகியுள்ளது. அதனால், இந்திய விமானப் படையின், புதிய விமான தளம், தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா, வரும், 27ம் திகதி நடைபெறுகிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமான தளங்கள், தமிழகத்தில், கோவை அருகே சூலூரிலும், சென்னையை அடுத்த தாம்பரத்திலும் ஏற்கனவே உள்ளன. தற்போது, மூன்றாவதாக, தஞ்சாவூரில், புதிய விமானத் தளம், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த விமான தளம் முழு அளவில் தயாராக, 5 ஆண்டுகளாகும். 2012ம் ஆண்டில், ரஷ்யாவிடமிருந்து, சூப்பர்சானிக் ஜெட் விமானங்கள் வாங்கப்பட்டன. “சுகோய்’ என, அழைக்கப்படும், இந்த ஜெட் விமானங்கள், மணிக்கு, 3,200 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடிய ஆற்றல் படைத்தவை. தஞ்சாவூர் விமானப்படை தளம், முழு அளவில் தயாரானவுடன், 16 முதல், 18 சூப்பர் சானிக், சுகோய் விமானங்கள், இங்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளன.

இந்திய பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதே, தஞ்சாவூரில் புதிதாக விமான தளம் அமைப்பதற்கான, முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, டில்லியில், நேற்று விமானப் படையின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டின் வடக்கு பகுதியில், எப்போதும் ராணுவத்தின் கண்காணிப்பும், பலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தென்பகுதி, கடல் சூழ்ந்த பகுதி. மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, இங்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. குறிப்பாக, இலங்கையில், 2009ம் ஆண்டில், உள்நாட்டு போர் நிறைவு பெற்றது. இந்த போருக்கு முன் வரை இருந்த நிலைமை வேறு. போருக்கு பின், சீனாவின் ஆதிக்கம், அதிகம் உள்ளது. இலங்கையின், ஹம்பன்தொடாவில், சீனா துறைமுகத்தை கட்டி முடித்துள்ளது.அதேபோல், பாகிஸ்தானிலும், காலூன்ற ஆரம்பித்து உள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய பெருங்கடலில், சீன ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, சீன கடற்படையின் நடமாட்டங்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த பின்னணியில் தான், தஞ்சாவூரில் புதிய விமானப்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த விமானப்படை தளம், 2018ம் ஆண்டில், முழுமையாக தயாராகி விடும். இதன் கட்டமைப்பு, சுகோய் விமானங்களை நிறுத்துவதற்காகவே, வடிவமைக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், மற்ற ரக விமானங்கள் எல்லாம், வந்து செல்லும். முழுமையாக தயாரான பின், கடைசியாக, இங்கு சுகோய் விமானங்கள் நிறுத்தப்படும்.

ஏற்கனவே, 6,000 அடியாக இருந்த ஓடுதளம், தற்போது, 12 ஆயிரம் அடியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விமானதள கட்டுப்பாட்டு அறையும் தயாராகியுள்ளது. விமானப்படை தளத்தைச் சுற்றிலும், வேலி கட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. தீயணைப்பு சேவையின் எண்ணிக்கையும், அதிகரிக்கப்பட்டுள்ளது.இரவு நேரங்களில், விமானங்கள் தரையிறங்க மற்றும் கிளம்பிச் செல்ல தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ரஷ்யாவிடம் இருந்து, மொத்தம், 272 சூப்பர்சானிக், சுகோய் விமானங்களை வாங்குவதற்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு, 56 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.

இவற்றில், 170 விமானங்கள் ஏற்கனவே, “டெலிவரி’யாகி விட்டன. இந்த விமானங்கள் தற்போது, மகாராஷ்டிரா மாநிலம் புனே, உ.பி.,யின் பரேலி, அசாமின் தேஜ்பூர், பஞ்சாபின் ஹல்வா, ராஜஸ்தானின் ஜோத்பூரிலும் உள்ள விமானப்படை தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

Aug 8, 2013

பெற்றோர்களின் கவனத்திற்கு.

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!