ரோம் நகரில் கி.பி.1427 இல் ஒரு சர்க்கஸ் கம்பெனி செயல்பட்டுவந்தது.அந்த சர்க்கஸ் கம்பெனியின் சிறப்பு யானைதான்! அந்த யானையின் பாகன் அந்த கம்பெனியிலேயே தங்கியிருந்து,யானைக்குப் பயிற்சி கொடுக்கிறான்.குட்டியாக இருந்த யானை மிகுந்த உற்சாகத்துடன் பாகன் கற்றுக் கொடுத்ததை சரியாகச் செய்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது.மூன்று கால்களில் நிற்பது,முக்காலியில் ஏறுவது, சைக்கிள் ஒட்டுவது என அந்த யானை செய்யும் சாகசங்களால் சர்க்கஸீக்கு வரும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நாட்கள் நகர்கின்றன;ஒருநாள் அந்த யானைப்பாகன் இறந்துவிடுகிறான்.அதில் இருந்து அந்த யானை சரிவர சாப்பிடுவது இல்லை;அதன் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருக்கிறது.அதன் உடல் சில நாட்களிலேயே மெலிந்து சோர்ந்து போனது;சர்க்கஸ் முதலாளி கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து காட்டுகிறார்.அவர்கள் மருந்து,மாத்திரைகளை கொடுக்கிறார்கள்.ஆனாலும்,அதன் உடல்நிலையில் எந்த சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை;அப்போது அங்கு வந்த வழிப்போக்கன் சர்க்கஸ் முதலாளியிடம், ‘யானையை நான் குணப்படுத்தட்டுமா?’ என்று கேட்கிறான்.அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே என முடிவு செய்கிறார்.
அந்த வழிப்போக்கன் யானையின் அருகில் சென்று,அதன் காதருகே நின்று யானையிடம் ஏதோ சொன்னான்.யானையின் கண்களில் உற்சாகம் தெரியத் துவங்கியது.உடனே அது எழுந்து போய் சாப்பாடு வைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று சாப்பிட்டது.சர்க்கஸ் முதலாளி,அந்த நபரிடம் சென்று, “ நீங்கள் அதன் காதருகே எதையோ சொன்னதும் சாப்பிட்டதே! அப்படி என்னதான் சொன்னீர்கள்?” என்று கேட்டார்.அந்த வழிப்போக்கன், “இந்த யானை இந்தியாவில் இருந்து வந்துள்ளது.யானைப்பாகன் இந்தியில் பேசி அதை பராமரித்து வந்தான்.பாகன் இல்லாததால் இந்த யானைக்கு அவன் பேசிய மொழியை கேட்காமல் வருத்தப்பட்டது.நானும் இந்தியாவில் இருந்து வருகிறேன்.அதனால் யானைக்கு அந்த மொழியில், ‘அட முட்டாள் யானையே இப்படி சாப்பிடாமல் கிடந்தால் உடல் மெலிந்து செத்துவிடுவாய்’ என்று சொன்னேன்’ அவ்வளவுதான்” என்றான்.
ஒரு யானைக்குக் கூட அதைப்பழக்கியவனின் மொழி என்பது முக்கியமாக இருக்கிறது.ஆனால்,தமிழ்நாட்டில் மட்டுமே ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மரியாதை என்ற அடிமைப்புத்தி பரவிவிட்டது.மரபும்,தொன்மையும் கொண்ட தமிழ் மொழியின் பெருமைகளை நாமே புரிந்து கொள்ளவில்லை;
உலகத்திலேயே எந்த நாட்டிலும் தாய்மொழியைத் தெரியாமல் எந்த துறையிலும் முன்னேற முடியாது.ஆனால்,இங்கே மட்டும் தான் அது நடக்கிறது.இங்கே தாய்மொழியைக் கற்றுக்கொள்ளாமலேயே எந்தத் துறையிலும் உயர் கல்வியைக் கற்றுவிட முடியும்.ஆனால்,அது வாழ்க்கைச் சார்ந்ததாக இருக்குமா? என்பது கேள்விக்குறியே.நாம் அனைவருமே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.அதற்கு நமது தாய்மொழியின் பெருமையும்,அதன் தொன்மையையும் தெரிந்திருப்பது அவசியம்.
நன்றி: ஜூனியர் விகடன்.