Oct 17, 2013

யட்சன் கொடுத்த தங்க ஜாடிகள்

ஒரு ஊரில் ஒரு மரம் இருந்தது;அந்த மரத்தில் யட்சன் ஒருவன் வசித்து வந்தான்.யட்சன் என்றால் குபேரன் என்று பெயர்.ஒரு நாள் அந்த மரத்தின் அருகே நாவிதன் ஒருவன் போனபோது, “உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா?” என்ற குரல் கேட்டது.

சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த அவன் மனிதர்கள் யாரும் இல்லாததால் சற்றுக் குழம்பிப் போனான்.இருந்தபோதிலும் ஏழு ஜாடித் தங்கம் என்ற வார்த்தை அவனுக்குள் ஆசையைத் தூண்டிவிட்டதால் “ஆமாம்,வேணும்”என்றான் பெருத்த எதிர்பார்ப்போடு!

“நீ உனது வீட்டுக்குப் போ.ஜாடிகளை உன் வீட்டில் வைத்துவிட்டேன்” என்று யட்சன் பதில் அளித்தான். அதைக் கேட்ட உடனே அந்த நாவிதன் வேகவேகமாக தனது வீட்டிற்குச் சென்றான்.அங்கே கண்ட காட்சி அவனை திகைக்க வைத்தது.ஏழு ஜாடிகள் அங்கே இருந்தன.
மூச்சிரைக்க ஓடி வந்த நாவிதன் அவசரமாக ஜாடிகளைத் திறந்து பார்த்தான்.எல்லாவற்றிலும் தங்கக் காசுகள் ஜொலித்தன.ஆறு ஜாடிகளில் தங்கம் நிறைந்திருந்தது.ஆனால்,ஏழாவது ஜாடியில் பாதி அளவிற்குத் தான் தங்கக்காசுகள் இருந்தன.ஆறு ஜாடிகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த அந்த நாவிதன்,ஏழாவது ஜாடியைப் பார்த்ததுமே அவனது மகிழ்ச்சி காற்று போனபலூனாகச் சுருங்கிப் போனது.

ஆறு ஜாடி தங்கத்தை செலவழித்து வாழ்க்கையை நிறைவாக அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்குப் பதிலாக,ஏழாவது ஜாடி குறைவாக இருக்கிறதே;அதை எப்பாடு பட்டாவது நிரப்பவேண்டும் என்ற தணியாத ஆர்வம் அந்த நாவிதனுக்கு ஏற்பட்டது.மனித மனத்தின் சுபாவங்களில் இதுவும் ஒன்று.

அந்த பாவப்பட்ட நாவிதனும் தன்னிடம் இருந்த பொன்,வெள்ளி,நகைகள் எல்லாவற்றையும் விற்று அதனை தங்கக்காசுகளாக்கி ஏழாவது ஜாடியில் போட ஆரம்பித்தான்;ஆனால்,எத்தனை காசுகள் போட்டாலும் அந்த மாய ஜாடி முன்பு போலவே குறைவாகவே இருந்தது. மேற்கொண்டு என்ன செய்து இந்த ஏழாவது ஜாடியை நிரப்பலாம் என்று நாவிதன் இரவும் பகலும் யோசிக்க ஆரம்பித்தான்.

சாப்பாட்டிற்காக தனது குடும்பத்திற்கு அதிக செலவாகிறது என்று அவனுக்குத் தோன்றியது.அதனால்,தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒருவேளை மட்டுமே உணவு கொடுத்து மீதிப்பணத்தைச் சேர்த்து, அவைகளை தங்கக் காசுகளாக மாற்றி ஏழாவது ஜாடிக்குள் போட்டு வந்தான். அவன் அரண்மனையில் வேலை பார்த்து வந்தான்; அந்த வேலையில் கிடைக்கும் சம்பளத்தையும் ஏழாவது ஜாடிக்குள் போட்டான். என்ன செய்தாலும் ஏழாவது ஜாடி நிரம்பவில்லை;
அந்தக் கவலையின் காரணமாக அவன் உடல் இளைக்க ஆரம்பித்தது;தாடி மீசையோடு நீண்ட நாள் நோயில் இருந்தவனைப் போன்ற தோற்றமடைந்தான்.

ஒரு நாள் அரசனைப் பார்த்து அவன், “குடும்பத்தை நடத்துவதற்கு பணம் போதவில்லை; ஆகவே, எனக்கு சம்பளத்தை இரண்டு மடங்காக்கித் தாருங்கள்” என்று வேண்டிக்கொண்டான்.அரசன் மிகவும் நல்லவன். நாவிதனுக்கு இரண்டு மடங்காக சம்பளத்தை உயர்த்தினான்.வருமானம் அதிகரித்தப்பிறகும் நாவிதன் தன் குடும்பத்திற்காக செலவு செய்யாமல் தங்கக்காசுகளாக்கி அந்த ஏழாவது ஜாடியில் போட்டுக்கொண்டே வந்தான். ஆனால், ஜாடி நிரம்பவில்லை; மேலும் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஓய்வு நேரங்களில் பிச்சை எடுக்கத் துவங்கினான்.அதில் வருகின்ற பணத்தையும் ஏழாவது ஜாடியில் போட்டு வந்தான்.ஜாடி நிரம்பவில்லை;

இப்படியே சில மாதங்கள் ஓடின. நாவிதனுடைய நிலைமை வரவர மோசமாகிக் கொண்டே வந்தது. அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது;ஒரு பிச்சைக்காரனைப் போலவும், பைத்தியம் பிடித்தவனைப் போலவும் அவன் காணப்பட்டான்.அவனது குழந்தைகள் போதிய சாப்பாடு இல்லாமல் எலும்பும் தோலுமாக இளைத்துப்போய்விட்டன. அவன் மனைவி வறுமையாலும், பசிக்கொடுமையாலும் நோயாளியாக மாறிவிட்டான்.


இதை எல்லாம் கவனித்து வந்த மன்னன், ஒரு நாள் நாவிதனை அழைத்து, “உனக்கு என்ன ஆயிற்று?நான் தரும் இரட்டிப்பு சம்பளத்தில் நீயும் உன் குடும்பத்தினரும் மிகவும் வசதியாக வாழ்க்கை நடத்தலாமே. அப்படியிருக்க உன் நிலைமை அதற்கு எதிர்மறையாக அல்லவா இருக்கிறது? நீ இப்போது வாங்கும் சம்பளத்தில் பாதி அளவு வாங்கும்போது திருப்தியோடும், மகிழ்ச்சியோடும் இருந்தாயே? இப்போது உன் முகத்தில் கவலையும், உன் வீட்டில் வறுமையும் நிரந்தரமாகத் தங்கிவிட்டதே! ஏழு ஜாடித்தங்கத்தை வாங்கிக் கொண்டாயா?” என்று கேட்டான்.
நாவிதன் அதிர்ந்து போனான். “ராஜாவே உங்களுக்கு இந்த உண்மை எப்படித் தெரியும்? யார் சொன்னார்கள்?” என்று கேட்டான்.
உடனே அரசன் நடந்தவற்றை புரிந்து கொண்டான்.

 “அடப்பாவி, தங்கத்திற்கு ஆசைப்பட்டு தங்கமான வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டாயே.யாரிடம் யட்சனின் செல்வம் வந்திருக்கிறதோ அவன் இப்படிப்பட்ட நிலைக்கு வந்துவிடுவான் என்பது உனக்குத் தெரியாதா?”
இதே யட்சன் ஒரு நாள் ஏழு ஜாடித் தங்கத்தை எனக்குத் தருவதாகச் சொன்னான். இது வரவுப் பணமா? அல்லது செலவுப் பணமா? என்று கேட்டேன். அதாவது அந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டியதா? அல்லது புதைத்து வைக்க வேண்டியதா? என்று தெரிந்துகொள்ளவே இந்தக் கேள்வியை எழுப்பினேன்.

உடனே யட்சன் ஒரு பதிலும் சொல்லாமல் ஓடிப்போய்விட்டான்.அந்தப் பணத்தை(தங்கத்தை) யாராலும் செலவழிக்க முடியாது என்பது உனக்குத் தெரியாதா?

மஹாலட்சுமி தரும் ஐஸ்வர்யத்திற்கும், யட்சனாகிய குபேரன் தரும் ஐஸ்வர்யத்திற்கும் வித்தியாசம் உண்டு.மஹாலட்சுமி தரும் பணத்தை(தங்கத்தை & செல்வ வளத்தை) செலவழிக்க முடியும்.ஆனால், யட்சனாகிய குபேரன் தரும் பணத்தை உன்னால் செலவழிக்க முடியாது; அது மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்ற ஆசையைத் தான் தரும்.உடனே போய் யட்சனிடம் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடு” என்று ஆலோசனை தந்தான்.


அதைக் கேட்டதும் நாவிதனுக்குப் புத்தி வந்தது. உடனே அவன் யட்சன் வாழும் மரத்தின் அருகே சென்றான். “யட்சனே, உன் தங்க ஜாடிகள் எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்” என்றான்.
“நல்லது அப்படியே ஆகட்டும்” என்று யட்சன் பதிலளித்தான். அடுத்த நிமிடமே நாவிதன் அவசரமாக தன் வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தான்.மாயமாக வந்த ஜாடிகள் மாயமாக மறைந்து விட்டிருந்தன.

நாவிதன் தலையில் கைவைத்துக் கொண்டு அழுதான். ஜாடிகள் மட்டுமா மறைந்தன; அவன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடு பட்டு சேர்த்து வைத்த அத்தனை செல்வமும் அல்லவா கையை விட்டுப்போய்விட்டது.அவைகளை மறுபடியும் சேர்க்க இன்னும் எத்தனை வருடங்கள் தானும் தன் குடும்பத்தாரும் கடினமாக உழைக்க வேண்டுமோ? என்ற கவலையும் பயமும் அவனை மிகவும் வாட்டியது.பேராசை பெருநஷ்டம்;கடினமான உழைப்பினால் அடைந்த செல்வம் தான் தங்கும்;மற்றவை மழையில் நனையும் மண்கட்டியைப் போல கரைந்துவிடும் என்ற உண்மையை அவன் உணர்ந்து கொண்டான்.

தங்கத்தின் மீது ஆசை வந்துவிட்டால் தூக்கம் போய்விடும்;சாப்பாடு பிடிக்காது;மனம் வேறு எந்த ஒன்றிலும் லயிக்காமல் போய்விடும்;என்ற உண்மையை இந்த நிஜச்சம்பவத்தின் மூலமாக ராமக்ருஷ்ண பரமஹம்சர் விவரித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment