Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Feb 28, 2014

தாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவம்

ரோம் நகரில் கி.பி.1427 இல் ஒரு சர்க்கஸ் கம்பெனி செயல்பட்டுவந்தது.அந்த சர்க்கஸ் கம்பெனியின் சிறப்பு யானைதான்! அந்த யானையின் பாகன் அந்த கம்பெனியிலேயே தங்கியிருந்து,யானைக்குப் பயிற்சி கொடுக்கிறான்.குட்டியாக இருந்த யானை மிகுந்த உற்சாகத்துடன் பாகன் கற்றுக் கொடுத்ததை சரியாகச் செய்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது.மூன்று கால்களில் நிற்பது,முக்காலியில் ஏறுவது, சைக்கிள் ஒட்டுவது என அந்த யானை செய்யும் சாகசங்களால் சர்க்கஸீக்கு வரும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நாட்கள் நகர்கின்றன;ஒருநாள் அந்த யானைப்பாகன் இறந்துவிடுகிறான்.அதில் இருந்து அந்த யானை சரிவர சாப்பிடுவது இல்லை;அதன் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருக்கிறது.அதன் உடல் சில நாட்களிலேயே மெலிந்து சோர்ந்து போனது;சர்க்கஸ் முதலாளி கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து காட்டுகிறார்.அவர்கள் மருந்து,மாத்திரைகளை கொடுக்கிறார்கள்.ஆனாலும்,அதன் உடல்நிலையில் எந்த சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை;அப்போது அங்கு வந்த வழிப்போக்கன் சர்க்கஸ் முதலாளியிடம், ‘யானையை நான் குணப்படுத்தட்டுமா?’ என்று கேட்கிறான்.அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே என முடிவு செய்கிறார்.

அந்த வழிப்போக்கன் யானையின் அருகில் சென்று,அதன் காதருகே நின்று யானையிடம் ஏதோ சொன்னான்.யானையின் கண்களில் உற்சாகம் தெரியத் துவங்கியது.உடனே அது எழுந்து போய் சாப்பாடு வைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று சாப்பிட்டது.சர்க்கஸ் முதலாளி,அந்த நபரிடம் சென்று, “ நீங்கள் அதன் காதருகே எதையோ சொன்னதும் சாப்பிட்டதே! அப்படி என்னதான் சொன்னீர்கள்?” என்று கேட்டார்.அந்த வழிப்போக்கன், “இந்த யானை இந்தியாவில் இருந்து வந்துள்ளது.யானைப்பாகன் இந்தியில் பேசி அதை பராமரித்து வந்தான்.பாகன் இல்லாததால் இந்த யானைக்கு அவன் பேசிய மொழியை கேட்காமல் வருத்தப்பட்டது.நானும் இந்தியாவில் இருந்து வருகிறேன்.அதனால் யானைக்கு அந்த மொழியில், ‘அட முட்டாள் யானையே இப்படி சாப்பிடாமல் கிடந்தால் உடல் மெலிந்து செத்துவிடுவாய்’ என்று சொன்னேன்’ அவ்வளவுதான்” என்றான்.

ஒரு யானைக்குக் கூட அதைப்பழக்கியவனின் மொழி என்பது முக்கியமாக இருக்கிறது.ஆனால்,தமிழ்நாட்டில் மட்டுமே ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மரியாதை என்ற அடிமைப்புத்தி பரவிவிட்டது.மரபும்,தொன்மையும் கொண்ட தமிழ் மொழியின் பெருமைகளை நாமே புரிந்து கொள்ளவில்லை;

உலகத்திலேயே எந்த நாட்டிலும் தாய்மொழியைத் தெரியாமல் எந்த துறையிலும் முன்னேற முடியாது.ஆனால்,இங்கே மட்டும் தான் அது நடக்கிறது.இங்கே தாய்மொழியைக் கற்றுக்கொள்ளாமலேயே எந்தத் துறையிலும் உயர் கல்வியைக் கற்றுவிட முடியும்.ஆனால்,அது வாழ்க்கைச் சார்ந்ததாக இருக்குமா? என்பது கேள்விக்குறியே.நாம் அனைவருமே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.அதற்கு நமது தாய்மொழியின் பெருமையும்,அதன் தொன்மையையும் தெரிந்திருப்பது அவசியம்.

நன்றி: ஜூனியர் விகடன்.

Oct 9, 2013

சென்னை பட்டிணம் - வரலாறு

Madras High Court
ஆகஸ்டு 22, 2010 அன்று சென்னைக்கு 371 வயதாகிறது. பல்வேறு வசதிகளும், ஆச்சரியங்களும் உயிர்த் துடிப்பும் நிறைந்த சென்னை பிறந்து வளர்ந்த கதையை நாம் பார்க்கலாம்.

371 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மாலையில் பிரான்ஸிஸ் டே என்னும் ஆங்கிலேயன் கப்பலில் வந்து மைலாப்பூர்க் கரையில் இறங்கினான். அவன் கண்களுக்குத் தெரிந்த கடற்கரை மணல் பரப்பு அவனை மிகவும் கவர்ந்தது. தான் வந்த வேலை முடிந்து விட்டது என்று டே முடிவு கட்டினான்.

370 ஆண்டுகளுக்கு முன்பு கோரமண்டல் கடற்கரை என்ற பெயர் பெற்ற வங்கக் கடலின் கரையோரம் மதராஸப்பட்டினம் என்ற பெயரில் சின்னஞ்சிறு கிராமமாக இருந்தது. சென்னை, மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவொற்றியூர் என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், சிறு சிறு குறு நகர்களாகவும் காணப்பட்டது. அந்தக் கால் சென்னைப் பட்டினம், புதர்கள், காடுகள் மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் ஓடின.

Chennai Collectorate
இந்தச் சென்னைப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மற்றும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுகீசியர்களின் வருகைக்குப் பிறகே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி.1552ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.

சென்னைப் பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதைக் குறிவைத்து இங்கு கால் பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி, பிரான்சிஸ் டே, ஆன்ட்ரு கோகன் ஆகிய இரண்டு அதிகாரிகளைச் சென்னைப் பட்டினத்திற்கு அனுப்பி வைத்தது. வணிக மையம் கட்டுவதற்காகச் சென்னைப் பட்டினத்தில் இடம் பார்க்க வேண்டிய பொறுப்பு டேக்கு அளிக்கப்ப்டடது.
கம்பெனியின் வியாபாரத்திற்காக ஒரு நல்ல இடத்தைத் தேடி டே பயணித்தபோது மைலாப்பூர் பற்றிக் கேள்விப்பட்டான். மைலாப்பூர் போர்ச்சுக்கீசியர்களின் வியாபார மையமாக இருந்தது. அதன் அருகிலேயே தங்கள் வியாபார மையம் அமைய வேண்டும் என டே முடிவு செய்தான்.

Madras City & Harbour - 1910's
அப்படி அவன் வரும்போதுதான் மைலாப்பூரின் அழகில் மயங்கி நின்றான். மைலாப்பூர் மட்டுமல்ல மதராஸ் முழுவதுமே அவன் கண்களுக்குக்கு கவர்ச்சி மிகுந்த ஒரு பெண்ணைப் போலக் காட்சியளித்தது என்று, ‘சென்னையின் கதை’ எனும் நூலை 1921ல் எழுதிய கிளின் பார்லோ குறிப்பிடுகிறார். இதுதான் கம்பெனிக்கு ஏற்ற இடம் என்று அவன் முடிவு செய்தான்.
நினைத்தாலே மூக்கைப் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு நாற்றம் பிடுங்கும் கூவம் நதி, 370 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? பிரான்ஸிஸ் டேக்கு மதராஸ் பிடித்துப்போனதற்குக் காரணமே கூவம் நதிதான் என்கிறார் பார்லோ. அந்தக் காலத்தில் இந்த நதிக்குத் திருவல்லிக்கேணி ஆறு என்ற பெயரும் உண்டு. அந்த ஆற்றை அவன் கண்ட சமயம் குளிர்காலம். ஆற்று நீர் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

அந்தக் காலத்தில் கூவம் நதி சுத்தமான தண்ணீர் ஓடும் நதியாக இருந்தது. சென்னை மக்கள் அதில் குளித்து விட்டுத்தான் தங்கள் தினசரி வேலையைத் தொடங்குவார்கள். வள்ளல் பச்சையப்பா முதலியார் தினமும் கூவம் நதியில் ஆசை தீரக் குளித்ததை எழுதி வைத்துள்ளார். அவர் வாழ்ந்த காலம் 1754 முதல் 1794.
வங்கக் கடலை ஒட்டி மைலாப்பூருக்கு அருகே உள்ள பகுதியை வாங்க வேண்டும் என்று டே தீர்மானித்தான். அப்பகுதியை ஆண்டுவந்த நாயக்க மன்னர்களிடம் பேச்சு வார்த்தையைத் தொடங்கினான். ஆனால் நாயக்க மன்னரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியான சந்திரகிரி மன்னனுக்கு நாயக்க மன்னர்கள் கப்பம் கட்டி வந்தார்கள். எனவே இந்த நில பேரத்துக்கு சந்திரகிரி மன்னரின் ஒப்புதல் தேவைப்பட்டது.

பிரான்ஸில் டே சந்திரகிரி மன்னரைப் பார்த்து பேசினான். தான் விரும்பிய இடத்தை விலை கொடுத்து வாங்கினான். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது 1639ம் ஆண்டு ஆகஸ்டு 22 ம் நாள். சென்னையில் இடம் வாங்குவதற்காகப் போடப்பட்ட இந்த வணிக ஒப்பந்தம் பின்னாளில் இந்திய மண்ணில் ஆங்கிலேய ஆட்சி உதயமாகக் காரணமாக அமைந்தது என்று பார்லோ குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர் ஆட்சி சந்திரகிரியில் கருவாகி, மதராஸப்ப்ட்டினத்தில் உருவாகிப் பிறகு இந்திய மண்ணில் பிறந்தது என்கிறார் இவர்.

ஆங்கிலேயர்கள் சென்னைப் பட்டினத்தை நவீன வசதிகள் கொண்ட நகரமாக உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார்கள். லண்டனில் தாங்கள் அனுபவித்தும் வரும் சகல வசதிகளும் இங்கே கிடைக்க வேண்டும் என்பதற்கான காரியங்களைத் தொடங்கினார்கள். டேயும் அவனது மேலதிகாரியான ஆண்ட்ரு கோகனும் சேர்ந்து மதராஸில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். இதன் காரணமாக சென்னை நகரம் மிகக்குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும் கட்டினார்கள். இப்படித்தான் இன்று நாம் பார்க்கும் சென்னை நகரம் உருவாகியது இதனால்தான் சென்னையில் ஆங்கிலேயர்கள் இடம் வாங்கிய ஆகஸ்ட் 22ஐ சென்னையின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறையப்பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் வீடு கட்டிக் குடியேறினர். அந்தப் பகுதி வெள்ளைப் பட்டினம் என்று அழைக்கப்ப்டடது. அதற்கு வெளிப்புறப் பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்புப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுன் ஆனது.

இந்த இடத்தை மையமாகக் கொண்டு தொடங்கிய ஆங்கிலேயர்களின் வர்த்தகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னைப் பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸப்பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னைப் பட்டினம் என்றும் அழைத்தனர். விரைவிலேயே சென்னைப் பட்டினம் முழுவதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் வசமாயிற்று. தங்கள் படை பலத்தாலும், பண பலத்தாலும் தந்திரமான முயற்சிகளாலும் ஆங்கிலேயர்கள் இதைச் சாதித்தார்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்றுவதற்கு முக்கியமான களமாகச் சென்னை அமைந்திருந்தது.
1653ல் சென்னைப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702ல் முகலாயர்களாலும், 1741ல் மராட்டியர்களாலும் அது தாக்குதலுக்கு உள்ளானது. 1746ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது.

பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்குப் போனது. 1758ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், இரண்டு மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் சென்னையைத் திரும்பவும் மீட்டனர். அன்று முதல் 1947ம் ஆண்டு வரை சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
சுதந்திரத்திற்குப் பின், சென்னை மாகானம் 1968ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது.

30 ஆயிரம் மக்கள் தொகையுடன் உருவான சென்னை நகரின் மக்கள் தொகை தற்போது ஒரு கோடியைத் தாண்டி விட்டது. சென்னை நகரின் பரப்பும் விரிவடைந்துகொண்டே போகிறது. சென்னைக்கு பிறந்த நாள் விழா எடுக்க வேண்டும் என்பதற்கு வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா 2004ம் ஆண்டு முன்முயற்சி எடுத்தார். அதற்குப் பலரும் உறுதுணையாக நின்றார்கள். புத்தக வெளியீட்டாளர் வின்சென்ட் டிசோஸா, பத்திரிக்கையாளர் சசி நாயர் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். 2004ம் ஆண்டு முதல் சென்னை பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.

Aug 23, 2013

திருவள்ளுவரைப் பற்றி

நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ…..!!!

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்… குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

நன்றி – மணிமாறன்.