Feb 28, 2014

தாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவம்

ரோம் நகரில் கி.பி.1427 இல் ஒரு சர்க்கஸ் கம்பெனி செயல்பட்டுவந்தது.அந்த சர்க்கஸ் கம்பெனியின் சிறப்பு யானைதான்! அந்த யானையின் பாகன் அந்த கம்பெனியிலேயே தங்கியிருந்து,யானைக்குப் பயிற்சி கொடுக்கிறான்.குட்டியாக இருந்த யானை மிகுந்த உற்சாகத்துடன் பாகன் கற்றுக் கொடுத்ததை சரியாகச் செய்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது.மூன்று கால்களில் நிற்பது,முக்காலியில் ஏறுவது, சைக்கிள் ஒட்டுவது என அந்த யானை செய்யும் சாகசங்களால் சர்க்கஸீக்கு வரும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நாட்கள் நகர்கின்றன;ஒருநாள் அந்த யானைப்பாகன் இறந்துவிடுகிறான்.அதில் இருந்து அந்த யானை சரிவர சாப்பிடுவது இல்லை;அதன் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருக்கிறது.அதன் உடல் சில நாட்களிலேயே மெலிந்து சோர்ந்து போனது;சர்க்கஸ் முதலாளி கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து காட்டுகிறார்.அவர்கள் மருந்து,மாத்திரைகளை கொடுக்கிறார்கள்.ஆனாலும்,அதன் உடல்நிலையில் எந்த சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை;அப்போது அங்கு வந்த வழிப்போக்கன் சர்க்கஸ் முதலாளியிடம், ‘யானையை நான் குணப்படுத்தட்டுமா?’ என்று கேட்கிறான்.அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே என முடிவு செய்கிறார்.

அந்த வழிப்போக்கன் யானையின் அருகில் சென்று,அதன் காதருகே நின்று யானையிடம் ஏதோ சொன்னான்.யானையின் கண்களில் உற்சாகம் தெரியத் துவங்கியது.உடனே அது எழுந்து போய் சாப்பாடு வைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று சாப்பிட்டது.சர்க்கஸ் முதலாளி,அந்த நபரிடம் சென்று, “ நீங்கள் அதன் காதருகே எதையோ சொன்னதும் சாப்பிட்டதே! அப்படி என்னதான் சொன்னீர்கள்?” என்று கேட்டார்.அந்த வழிப்போக்கன், “இந்த யானை இந்தியாவில் இருந்து வந்துள்ளது.யானைப்பாகன் இந்தியில் பேசி அதை பராமரித்து வந்தான்.பாகன் இல்லாததால் இந்த யானைக்கு அவன் பேசிய மொழியை கேட்காமல் வருத்தப்பட்டது.நானும் இந்தியாவில் இருந்து வருகிறேன்.அதனால் யானைக்கு அந்த மொழியில், ‘அட முட்டாள் யானையே இப்படி சாப்பிடாமல் கிடந்தால் உடல் மெலிந்து செத்துவிடுவாய்’ என்று சொன்னேன்’ அவ்வளவுதான்” என்றான்.

ஒரு யானைக்குக் கூட அதைப்பழக்கியவனின் மொழி என்பது முக்கியமாக இருக்கிறது.ஆனால்,தமிழ்நாட்டில் மட்டுமே ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மரியாதை என்ற அடிமைப்புத்தி பரவிவிட்டது.மரபும்,தொன்மையும் கொண்ட தமிழ் மொழியின் பெருமைகளை நாமே புரிந்து கொள்ளவில்லை;

உலகத்திலேயே எந்த நாட்டிலும் தாய்மொழியைத் தெரியாமல் எந்த துறையிலும் முன்னேற முடியாது.ஆனால்,இங்கே மட்டும் தான் அது நடக்கிறது.இங்கே தாய்மொழியைக் கற்றுக்கொள்ளாமலேயே எந்தத் துறையிலும் உயர் கல்வியைக் கற்றுவிட முடியும்.ஆனால்,அது வாழ்க்கைச் சார்ந்ததாக இருக்குமா? என்பது கேள்விக்குறியே.நாம் அனைவருமே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.அதற்கு நமது தாய்மொழியின் பெருமையும்,அதன் தொன்மையையும் தெரிந்திருப்பது அவசியம்.

நன்றி: ஜூனியர் விகடன்.

சிவராத்திரி

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி அ‌ன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நிதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

அன்று முழுவது‌ம் உணவருந்தக் கூடாது. பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் சிவ ஆலயங்களில் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

  • முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் – சந்தனப்பூச்சு – வில்வம், தாமரை அலங்காரம் – அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் – ருக்வேத பாராயணம்.
  • இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் – பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் – வில்வம் அர்ச்சனை – பாயாசம் நிவேதனம் – யசுர் வேத பாராயணம்.
  • மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் – பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் – வில்வம் அர்ச்சனை – எள் அன்னம் நிவேதனம் – சாமவேத பாராயணம்.
  • நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் – நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் – அர்ச்சனை – சுத்தான்னம் நிவேதனம் – அதர்வன வேத பாராயணம்.


அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையு‌ம், உச்சிக்கால பூஜையையு‌ம் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும் என விரும்பும் எவர் ஒருவரும், சிரத்தையுடன் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைபிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது.

நன்றி: தினமணி

Feb 24, 2014

வம்பு பேசாதீர்கள்.... ஆப்பு காத்திருக்கிறது!

ஒரு துறவி காட்டில் நிஷ்டையில் இருந்தார்.அவர் சுரதலப்பிட்சை எடுத்துச் சாப்பிடுவார்.(சுரதலப்பிட்சை என்றால் கையை நீட்டியபடி தவத்தில் இருப்பார்;அவர் கையில் யார் எதை வைக்கிறார்களோ அதுதான் அவருக்கு அன்றைய உணவு!அதைத்தான் சாப்பிட வேண்டும்;)


ஒருநாள்,வேட்டையாட வந்த அந்தப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் அந்த துறவி தவம் செய்து வந்த இடத்திற்கு வந்தான்;வேட்டையாடிக் களைத்துப் போன அந்த மன்னனுக்கு தாகம் எடுக்கவே இந்த துறவியைப் பார்த்து தண்ணீர் கேட்டான்.தன்னை மறந்து தவத்தில் இருந்த அந்த துறவிக்கு மன்னன் கேட்டது காதில் விழவில்லை;மன்னனுக்கோ வேட்டையாடிய களைப்பில்,இந்தச் சாமியார் தன்னை மதிக்கவில்லை; என்று நினைத்து,கோபத்தில் குதிரைச் சாணத்தை அந்த துறவியின் கைகளில் வைத்துவிட்டு குடிநீர் தேடி வேறு இடம் போய்விட்டான்.


துறவி கண்விழித்துப் பார்த்தபோது,தனது கையில் குதிரைச்சாணம் இருந்ததைக் கண்டு,அதையே அன்றைய உணவாகச் சாப்பிட்டுவிட்டார்.யார் எதை அவர் கையில் வைத்தாலும் அதைச் சாப்பிட வேண்டும் என்பது அவர் தனக்குத் தானே வகுத்துக் கொண்ட நியதி.இந்தச் சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆயின.மன்னன் இந்த சம்பவத்தை மறந்தே போனான்.


மன்னனின் மகள் பருவமடைந்து,பல ஆண்டுகள் ஆகியும் திருமணம் ஆகவில்லை;சரியான வரன் அமையவேயில்லை;மன்னன் தனது ஆஸ்தான ஜோதிடரை அழைத்து, ‘இளவரசிக்கு ஏதாவது தோஷம் இருக்கிறதா? என்று பாருங்கள்’ என்று தனது மகளுடைய ஜாதகத்தைக் கொடுத்தான்.ஜோதிடர் அதை ஆராய்ந்து, “தேவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக யாகம் ஒன்று நடத்துங்கள்;அவ்வாறு செய்தால் இளவரசியின் திருமணதோஷம் நீங்கிவிடும்” என்று கணித்துச் சொன்னார்.அதன்படி,தேவர்களை மகிழ்ச்சிப்படுத்துவிதமாக யாகம் ஒன்றை நடத்தினார் மன்னன்.


துறவிக்கு மன்னன் செய்த பாவச்செயலை அறிந்த தேவர்கள்,காட்டுக்குப்போய் அந்த துறவியைச் சந்தித்தார்கள்.அவர்கள் நடந்ததை துறவியிடம் தெரிவித்தனர். “மன்னன் எங்களைக் குறித்து யாகம் நடத்தினான்.யாகத்தின் பலனை நாங்கள் தரவேண்டியது எங்கள் கடமை ஆகும்.ஆனால்,அதற்கு முன் உங்களை குதிரைச்சாணம் சாப்பிட வைத்த பாவத்தைப்போக்கினால் தான் நாங்கள் தரும் வரம் பலிதமாகும்;எனவே,இதற்குத் தாங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்று விவரித்தனர்.துறவியும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.


துறவி ,மன்னனின் அரண்மனைக்குச் சென்று, மன்னன் தனக்குச் செய்த இழிசெயலை நினைவூட்டினார். ‘நான் உனக்கு எந்த சாபத்தையும் கொடுக்கவில்லை;நீ செய்த வினையின் பலனை நீ அறுவடை செய்து கொண்டிருக்கிறாய்.இதிலிருந்து தப்பிக்க நான் உனக்கு ஒரு வழி சொல்கிறேன்;கொஞ்ச காலத்திற்கு அரசாங்கத்தை உனது மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு.நீயும் உன் மகளும் காட்டிற்குச் சென்று அங்கு ஆசிரமம் கட்டிக்கொண்டு இருங்கள்;நான் பட்ட துயரங்களை நீயும் அனுபவிக்கும் போது தான் என்னைப் போன்ற துறவிகள் படும் கஷ்டங்கள் உனக்கும் புரியும்.உனது பாவமும் மன்னிக்கப்படும்;தினமும் நீ என்னைப் போன்று பிச்சை எடுத்துதான் சாப்பிட வேண்டும்;’ என்று உபதேசம்  செய்தார்.


மன்னனும் துறவியிடம் ஆசி பெற்று,தனது மகளுக்குத் திருமணம் ஆனால் போதும் என்பதற்காக அவரது வார்தைகளை நடைமுறைப்படுத்தத் துவங்கினான்.(பரிகாரங்களை எப்போதும் ரகசியமாகவே செய்ய வேண்டும்;பகிரங்கப்படுத்தினால்,பலன்கள் கிடைக்காமலேயே போய்விடும்)இதைப் பற்றி அறியாத அவனது நாட்டு மக்கள் மன்னன் மீதே அவச்சொல்லாகப் பேசினார்கள்.பேசக்கூடாத விதங்களில் மன்னனையும்,அவரது மகளையும் இணைத்து வைத்துப் பேசினார்கள்.இப்படி நாட்டு மக்கள்,அவர்களின் மன்னனைப் பற்றிப் பேச,பேச பேசியவர்களிடம் மன்னனின் பாவங்கள் ஒட்டிக்கொண்டன.மலை போல இருந்த பாவச்சுமையானது,நாடு முழுக்க இருந்த மக்களின் அவச்சொற்களால் விலகிவிட்டது.


ஒருநாள்,ஒரு பார்வையில்லாத கணவனும்,அவனது மனைவியும் அந்த காட்டு வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.அந்த பார்வையில்லாத கணவன்,தனது மனைவியிடம், “இன்று நமக்கு யார் உணவு தருவார்?” என்று கேட்டான்.
அதற்கு அவன் மனைவியோ, “தன் மகளுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என்ற ஒரு உன்னதமான லட்சியத்திற்காக, ராஜ்ஜியத்தையே தியாகம் செய்துவிட்டு,காட்டில் தவசியாக வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு உன்னதமான மன்னனின் ஆசிரமத்தில் தான் நமக்கு இன்று உணவு!!!” என்று கூறினாள்.இருவரும் மன்னனின் ஆசிரமத்தை அடைந்து இளவரசி அளித்த உணவைச் சாப்பிட்டனர்.


இளவரசியிடம், ‘என் புருஷன் பார்வையற்றவர்;இவருக்காக வாழ்நாள் முழுவதும் நான் தியாகம் செய்திருக்கிற பலனில் உனக்கு ஆசிர்வாதம் செய்கிறேன்.உனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்’ என்று இளவரசிக்கு குங்குமம் வைத்து ஆசி கூறினாள்.இந்த ஆசியாலேயே அடுத்து வந்த சில மாதங்களில் இளவரசிக்கு நல்ல வரன் அமைந்து சிறப்பான திருமண வாழ்க்கை அமைந்தது.

இந்த உண்மைச்சம்பவம் தெரிவிப்பது என்ன?
தப்பு செய்பவருக்குத் தண்டனை நிச்சயமாக உண்டு;அந்த தண்டனை எப்படி கழியும்?
தப்பு செய்தவரின் கர்மாவை வேறு யாராவது வாங்கிக் கொண்டால் தான் போகும்.
யார் அடுத்தவரின் தப்புக்களை வாங்கிக் கொள்கிறார்கள்?
பிறரின் வாழ்க்கையில் நடந்த உண்மைநிலையை அறியாமல் வம்பு பேசுபவர்கள்தான் அடுத்தவரின் தப்புக்களின் கர்மவினைகளை வாங்கிக் கொள்கிறார்கள்.இவன் இப்படி,அவன் அப்படி,அவளைப் பற்றி எனக்குத் தெரியாதாக்கும்;இவளைப்பற்றி எனக்கு அப்பவே தெரியுமே என்று வம்பு பேசுபவர்களே அடுத்தவர்களின் கர்மச்சுமைகளை சுமக்கிறார்கள்.

நன்றி:ஜோதிடபூமி

Feb 2, 2014

ஆன்மீகப்பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள்

இளைஞர்கள் நவீனமாக இருக்க வேண்டும்;ஆனால் அதே நேரத்தில் மேற்கத்திய நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது.

நமது பாரத தேசம் மகத்தான ஆன்மீகப்பாரம்பரியத்தை கடந்த 200 நூற்றாண்டுகளாக வளர்த்தெடுத்துள்ளது;நாம் ஒவ்வொருவருமே சித்தர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்;காலத்துக்கேற்ற மாற்றம்;பாரம்பரியத்தைக் கைவிடாத மாற்றம் என்ற கொள்கையில் ஒவ்வொரு நாளும் பிடிவாதமாக இருக்க வேண்டும்;நமது ஆன்மீகச் சிறப்புகளையும்,தொன்மையையும் யாருக்காவும்,எதற்காகவும்,எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது;இதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

காலத்திற்கேற்ப மாறுதல்களை உள்வாங்கிக் கொள்வது தவறல்ல;ஆனால்,அதே சமயத்தில் நமது கலாச்சாரத்தையும்,தர்மத்தையும் கைவிட்டுவிடலாமா?

முன்னேற்றம் என்ற பெயரில் நமது பண்பாட்டுக்கு எதிரான செயல்களை நாகரீகம் என்று ஏற்றுக்கொள்ளலாமா?

ஒருபோதும் மனித நேயத்தையும்,பரிவுணர்வையும்,பிறருக்கு உதவி செய்வதையும் கைவிட்டுவிடக்கூடாது.அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்வது நமது பாரம்பரியம் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது.ஒருங்கிணைந்து பணிபுரியும் பண்பினை நாம் அனைவரும் வளர்த்துக் கொண்டால்,சில வருடங்களிலேயே நமது தேசம் வலிமைமிக்கதாக மாறிவிடும்.

சுவாமி விவேகானந்தரின் பேச்சு,
விஜயபாரதம்,
வெளியீடு 7.2.14

குலதெய்வம் வழிபாடு - 2

காஞ்சிப்பெரியவா என்ற ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதிசுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வந்த காலம் அது;ஊர் ஊராகச் சென்று தங்குவார்;அப்போது ஒருமுறை ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார்;அவரை அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்தித்தார்;

“சாமி,ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு;பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுது;ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும்;ஆனா, என் வாழ்க்கையில போராட்டமே வாழ்க்கையா இருக்கு.என்ன செய்றதுனே தெரியல” என்று அழுதார்.

பெரியவா அவரிடம், “ குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்றியா?” என்று கேட்டார்.

“குலதெய்வமா அப்டினா?” என்று திருப்பிக் கேட்டார் அந்த விவசாயி.

“சரிதான்.உங்கள் குல தெய்வம் எதுன்னே தெரியாதா?”

“ஆமாம் சாமி, வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க.பல காலம் அங்க இருந்துட்டு திரும்பி வந்த குடும்பம் எங்க குடும்பம்;என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால,அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க.நாங்கள்லாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

“உன் முன்னோர்கள் யாராவது இப்போ உயிரோட இருக்காங்களா?”

“ஒருத்தர் கிராமத்துல இருக்கார்.அப்பா வழி பட்டனார் அவர்”

“அவர் கிட்ட போயி உங்க குலதெய்வத்தை பத்தி கொஞ்சம் கேட்டுட்டு வா”

“என்ன சாமி நீங்க? ஊர்ல எவ்வளவோ கோயில்  இருக்கு;அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு;அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே”

“அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம,குலதெய்வத்த தான் தெரிஞ்சுகிட்டு வரச் சொல்றீங்களே?”

“காரணமாத்தான் சொல்றேன்;ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது.நீ என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்ல;வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம் தான்.எனக்குப் பாத்திரமே கூட தேவையில்லை; ஆனா,உனக்கு பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வைக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா,அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளியே போகுமா போகாதா?”

அந்த விவசாயியும் பத்து நாட்கள் கழித்து திரும்பி வந்தார்.

“சாமி,நீங்க சொன்னதை செய்துட்டேன்.எங்க குலதெய்வம் பேரு பேச்சாயிங்க ஒரு அம்மன்.அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சு போய் கிடந்துச்சு.யாருமே போகாம விட்டதால,கோயிலை புதர் மூடிடுச்சு.நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம்.அங்க ஒரு நடுகல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அது மேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு,கற்பூரம் காட்டி கும்பிட்டு வரேன்”

“சபாஷ்! அந்த கோயில நல்லபடியா எடுத்துக் கட்டு.தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டம் தானா நீங்கிடும்.அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! நான் சொன்னதை மறந்துடாதே.பேச்சாயியை விட்டுடாதே” என்றார் பெரியவா.

அவரும் அவ்வாறே செய்து வந்தார்.ஒரு வருடமும் ஓடியது.ஓருவருடம் கடந்ததும்,பெரியவாளைச் சந்திக்க அந்த விவசாயி வந்தார்.இந்த முறை அவரிடம் செல்வச் செழிப்பு தெரிந்தது.முகத்தில் மலர்ச்சி கலந்த புன்னகையும்! பெரியவாளைப் பார்க்க அந்த விவசாயி சும்மா வரவில்லை;தட்டு நிறைய பூக்கள்,பழங்கள்,கொஞ்சம் தட்சிணையாக பணக்கட்டுடன் வந்து நின்றார்.பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்த்தார்.

“சாமீ! நான் இப்ப நல்லா இருக்கேன்.பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க.இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்.ஆனா,எனக்கு விளக்கத்தை மட்டும் இன்னும் தராம இருக்கீங்க.இந்த அதிசயம் எப்படி நடந்தது?” அந்த விவசாயி திரும்பக் கேட்டார்.

பெரியவாளும் மனம் மகிழ்ந்து,


நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குலதெய்வம் ஆகும்.முன்னோர்கள் என்றால்,நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால்,இங்கே முன்னோர்கள் என்றால் நாம் நம் தந்தை வழி பாட்டன்கள்,பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த தந்தை வழிப்பாட்டன்மார்கள் வரிசையில் ஒரு பிரம்மாண்டமான ஒழுங்கு இருக்கிறது.அதுதான் கோத்திரம் என்ற ரிஷியின் வழிவழிப்பாதை;தலைமுறைப்பாதை.


பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத்துணையாகக் கைபிடித்திருப்பார்கள்.எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது.இதனால் ரிஷி(சித்தர்) பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல்,ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும்.இது ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன.அந்த கோவில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்;போகாமலும் இருக்கலாம்.அதற்கு உத்தரவாதமில்லை;ஆனால்,குலதெய்வக் கோவிலுக்கு,நாம் பக்தி என்ற ஒன்றை அறிவதற்கு முன்பே,நம் தாய் தந்தையரால் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு,வணங்க வைக்கவும் படுகிறோம்.இதன்படி பார்த்தால்,நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது,எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?

நன்றி: ஆன்மீகக்கடல்